முதலில், ஒரு மாதம் எப்படி தொடங்குவது என்று, பார்ப்போம்.
ஆண்டு முறைகள் பொதுவாக இரண்டு முறைகள் இந்தியாவில் பின்பற்றப்பட்டு வருகின்றன.
ஒன்று, சூரியமான முறை, மற்றொன்று சந்திரமான முறை. இதில், தெலுங்கர், கன்னடர், வட
இந்தியர் சந்திரமான புத்தாண்டையே கொண்டாடுவர். தமிழர், மலையாளிகள், ஒரியர்,
வங்கர், மற்றும் சோழர் ஆண்ட கம்போடியா, பர்மா, தாய்லாந்து, இலங்கை ஆகியோர்
சூரியமான முறை புத்தாண்டையே கொண்டாடுவர்.
சந்திரமான முறையை பின்பற்றுவோர், தங்கள் மாதம் எப்படி
பிறக்கும் என்றால், ஒரு அமாவசையிலிருந்து அடுத்த அமாவாசை வரை ஒரு மாதமாக கொள்வர்
அல்லது ஒரு பூரணையிலிருந்து அடுத்த பூரணை.
சூரியமான முறையை பின்பற்றுவோர், சூரியன் ஒரு
இராசியில் நுழைந்து, அதிலிருந்து வெளியேறும் காலம் வரை ஒரு மாதமாக கொள்வர். இதில்
இராசி என்றால் என்னவென்று பார்ப்போம்.
வானில், நட்சத்திரக் கூட்டங்கள் நிலையாக இருக்கும். இப்படி, நிலையாக இருக்கும்
நட்சத்திரக் கூட்டங்களை 12ஆக பிரித்து வைத்து, ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பெயரை
சூட்டியுள்ளனர். அதன் பெயரே, இராசி என்று கூறுகிறோம் அல்லது ஓரை என்று கூறுகிறோம். படத்தை காண்க...
இந்த இராசி பெயர்களே சூரியமான மாதப்பெயர்கள். இன்றும்
சேரர்களான கேரளவர், மேடம், இடபம் என்று இராசி பெயர்களையே தங்கள் மாதப்பெயர்களாக
கொண்டுள்ளனர்.
இதில் முதல் இராசியே, மேழம்/மேடம்.சூரியன், இந்த
இராசியில் நுழையும் மாதமே புத்தாண்டு. எவ்வளவு அறிவியல் பூர்வமான புத்தாண்டு என்று
பாருங்கள். சரி, இந்த மேழ இராசிதான் எப்படி முதல் மாதம் கொள்வதென்று
கேட்கிறீர்களா? அதற்கு நக்கீரன், தன் சங்க இலக்கியமான நெடுநெல்வாடை நூலில்
விடைக்கூறிவிட்டார்.
”திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக விண்ணூர்பு
திரிதரும் வீங்கு செலல் மண்டிலம்” என்பது சங்க இலக்கியமாகிய நெடுநல்வாடையில் இடம்பெறும் தொடராகும். (வரி 160 – 161)
வான்மண்டலத்தில், சூரியன்
ஆட்டை(மேழம்) தலையாக(முதலாக) கொண்டு சுற்றிவருகிறது என்று நக்கீரர் கூறுகிறார்.
எனவே, மேழமே(சித்திரை) முதல் மாதம் என்று புலப்படுகிறது. மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கின்ற மாதத் தொடக்கமே புத்தாண்டின்
தொடக்கமாகும். ரோமானிய நாகரிகத்தில் முதல் மாதமாகக் கருதப்பட்ட “ஏரீஸ்’என்பது ஆடு
(மேஷம்) என்றே பொருள்படும். உலகம் முழுவதும் மேழத்தையே( ஏரிஸ்/மார்ச்சு)
புத்தாண்டாக கொண்டிருந்தனர். செப்டம்பர்,அக்டோபர், நவம்பர், திசம்பர் என்பது 7வது,
8வது, 9வது, 10வது மாதங்களின் பெயரையே குறிக்கும். சப்த-7, அஷ்ட-8, நவ-9, தச-10.
ஜனவரி 11வது மாதமாகவும், 12 ஆவது மாதமாகவும் இருந்தது. எனவேதான் இறுதி மாதமான
பிப்ரவரி திங்களில் குறைவான நாட்கள் உள்ளதை காணலாம். பின்புதான், ஜனவரி மாதம்
முதல் மாதமாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு அறிவியல் காரணம் இல்லாமல், சமய காரணமே
உள்ளது. சரி, அது அவர்கள் பிரச்சனை, நம் பிரச்சனைக்கு வருவோம்..
சரி, நக்கீரர்
கூறிய சங்க இலக்கிய ஆதாரத்தைப் பார்த்தோம். அடுத்து, திராவிடர்கள், சங்க இலக்கிய
ஆதாரங்களைக்கூட எடுத்துக்கொள்ள மாட்டர். அதுவும் ஆரிய மாயை என்று கூறினாலும்
கூறுவர். அவர்களுக்காக தமிழ் சித்தரான அகத்தியர் தன் பன்னீராயிரம் என்னும் நூலில் என்னக்கூறியுள்ளார்
என்று பார்ப்போம்.
"மேடமென்னும் ராசியாம் மதனிற்கேளு
மேலானா யசுவினி முதலாம்பாதம்
குலவியே கதிரவந்தான் வந்துதிக்க
வருச புருசன் அவதரிப்பானென்றே
பரிவுடன் உலகிற்கு நீசாற்றே"
என்கிறார் அகத்தியர்.
ஆக, மேழ(சித்திரை) மாதத்திலேயே வருடம் பிறக்கிறது
என்று தமிழ் சித்தரான அகத்தியரே உறுதிப்படுத்துகிறார்.
அடுத்து, தமிழில் ஐம்பெரும்காப்பியங்களுல் ஒன்றான
புத்த சமய நூலான மணிமேகலை என்ன கூறுகிறது என்றுக் காண்போம்.
அட்டவனை 1: சித்திரை புத்தாண்டு
இளவேனில்: சித்திரை, வைகாசி
முதுவேனில்:ஆனி,ஆடி
கார்: ஆவணி,புரட்டாசி
கூதிர்: ஐப்பசி, கார்த்திகை
முன்பனி:மார்கழி, தை
பின்பனி: மாசி, பங்குனி
அட்டவனை 1ன் படி, சித்திரையை புத்தாண்டாக
கொண்டால், இளவேனிலில் சித்திரை, வைகாசி
என்பதே இருக்கிறது. மணிமேகலையில், வைகாசி(இடபம்) இளவேனில் என்பதற்கு ஆதாரம்
உள்ளது.
“இருது இளவேனிலில் எரிகதிர் இடபத்து
ஒரு பதின் மேலும் ஒரு மூன்று சென்றபின்
மீனத்து இடைநிலை மீனத்து அகவையின்
போதித் தலைவனோடு பொருந்தி..”
ஒரு பதின் மேலும் ஒரு மூன்று சென்றபின்
மீனத்து இடைநிலை மீனத்து அகவையின்
போதித் தலைவனோடு பொருந்தி..”
அதாவது,
இளவேனில் காலத்தில், சூரியன் இடபம்(வைகாசி)யில் பதிமூன்று நாள் சென்றப்பின், விசாக
நாளில் புத்தர் பிறந்தார் என்று சீத்தலை சாத்தனார் கூறுகிறார். இதன் மூலம்,
சித்திரை, வைகாசி ஆகியவை இளவேனில் மாதங்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டு, இளவேனிலே
புத்தாண்டு துவக்கம் என்பதால், சித்திரையே புத்தாண்டு என்று
உறுதிப்படுத்தப்படுகிறது.
சமண
சமய நூலான சிலப்பதிகாரமும், இராசிகளை வரிசைப்படுத்தும்போது, மேழத்தையே முதன்மையாக
கூறுகிறது.
ஆக,
வேத முறையை பின்பற்றிய தமிழர்கள், சித்தர் நெறியை பின்பற்றிய தமிழர்கள், சமண
சமயத்தை பின்பற்றிய தமிழர்கள், பெளத்த நெறியை பின்பற்றிய தமிழர்கள் அனைவருக்கும்
சித்திரையே புத்தாண்டாக இருந்துள்ளது.
தையை புத்தாண்டாக வைக்க கூறுவோர், சித்திரை புத்தாண்டு மத தொடர்புள்ளது,
எனவே, கிருத்தவர்கள், இஸ்லாமியர் என அனைவருக்கும் பொதுவாய் இருக்கும் தைக்கு மாற்ற
வேண்டும் என்று சொல்லுவர். உங்களை யார் சித்திரை புத்தாண்டிற்கு மத சாயம் பூச
சொன்னது?? இந்துக்கள், சமணர்கள், பெளத்தர்கள் என அனைவரும் ஒன்றாகத்தானே, சமய
வேறுபாடு இன்றி புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். அதே நாளில் கிருத்தவர்களும்,
முஸ்லீம்களும் புத்தாண்டு கொண்டாடலாமே? யாரும் தடை விதிக்கப்போவதில்லையே??
எப்படியோ, கிருத்தவர்கள், ஜனவரி 1ஐயும், இஸ்லாமியர்கள், முஹரம் 1ஐயும் தான்
புத்தாண்டாக அனுசரிக்க போகிறார்கள். மதம் கடந்து, சில தமிழுணர்வு கொண்ட
கிருஸ்த்தவ, இஸ்லாமியர், தமிழ் புத்தாண்டு கொண்டாட வேண்டுமென்றால், சித்திரையில்
புத்தாண்டு இருந்தால் என்ன? தையில் புத்தாண்டு இருந்தால் என்ன? தமிழ் புத்தாண்டு
கொண்டாட வேண்டும் என்று உண்மையில் விழைவு இருந்தால், சித்திரையிலேயே புத்தாண்டு
கொண்டாடலாமே... தவறில்லையே? யாரும் தடுக்கப்போவதில்லையே..
(தொடரும்)
No comments:
Post a Comment