Tuesday, 11 August 2015

எது புத்தாண்டு??? பாகம் 3


அட்டவனை 1: சித்திரை புத்தாண்டு
இளவேனில்: சித்திரை, வைகாசி
முதுவேனில்:ஆனி,ஆடி
கார்: ஆவணி,புரட்டாசி
கூதிர்: ஐப்பசி, கார்த்திகை
முன்பனி:மார்கழி, தை
பின்பனி: மாசி, பங்குனி
அட்டவனை 2: தை புத்தாண்டு
இளவேனில்: தை, மாசி
முதுவேனில்: பங்குனி, சித்திரை
கார்: வைகாசி, ஆனி
கூதிர்: ஆடி, ஆவணி
முன்பனி: புரட்டாசி, ஐப்பசி
பின்பனி: கார்த்திகை, மார்கழி

தைப்புதாண்டு என்று சொல்லுவோர், அட்டவணை 2ஐ பாருங்கள். கார்காலம்(மழைக்காலம்) எப்போது இருக்கிறது. வைகாசி, ஆனியா? வைகாசி மழைக்காலம் என்றால் குழந்தைக்கூட சிரிக்கும். சித்திரை இறுதியில் தொடங்கும் கத்திரி வெய்யில் வைகாசி மாதம் பாதி வரை நீடிக்கும். வெய்யில் உக்கிரமாக இருக்கும் வைகாசியை கார்காலம் என்று சொன்னால், குழந்தைக்கூட சிரிக்காதா என்ன? அடுத்து, கூதிர் காலத்தை பாருங்கள்.ஆடி, ஆவணி.  ஆடிமாதம் காற்றில் அம்மியும் பறக்கும்என்பர், “ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை பொழியும்என்பது மூலம், ஆடி மாதம் காற்றடிக்கும் மாதமே அன்றி, அது, குளிர்ந்த காலம்(கூதிர் காலம்) அன்று.
ஐப்பசி மாதம் அடைமழை என்பர்” ,அப்படிப்பட்ட ஐப்பசி எங்கு இருக்கிறது என்று பாருங்கள், முன்பனியில். இப்படி, தையை முதலாக கொண்டால், சற்றும் பொருந்தாத ஆறுபருவங்கள் தான் இருக்கின்றன.

இதுவே சித்திரையை முதலாக கொண்டு பார்த்தால், சரியாக உள்ளது. இளவேனிலில் சித்திரை, வைகாசி, முதுவேனிலில் ஆனி,ஆடி, (முதுமை + வேனில்). ஒரு முதியவன் எப்படி சக்தியற்று இருப்பானோ, அப்படித்தான் இந்த மாதங்களில் வெயில் சக்தியற்று குறைவாக இருக்கும். ஆவணி, புரட்டாசியில் மழைப்பெய்யத்தொடங்கும். ஆனால், இது குளிர்ச்சியைத்தராது, நான்குமாதம் அடித்த வெய்யிலில், நிலம் நன்றாக சூடாகி இருக்கும். பெய்யும் சிறிதளவு மழையில் உஷ்ணத்தை கிளப்பி விடத்தான் செய்யுமேத் தவிர பூமியை குளிர்விக்காது. பின்பு ஐப்பசியில் ஆரம்பிக்கும் அடைமழையில்தான் பூமி குளிர்ச்சி அடையும். ஆக, ஐப்பசி, கார்த்திகை கூதிர் காலம்(பூமி குளிரும் காலம்), மார்கழி, தை என்பது முன்பனி என்பதை முன்பே பார்த்தோம். இறுதியில், மாசி, பங்குனியில் பின்பனி காலம். இவர்கள் கொடுத்த ஓரிரு ஆதாரங்களும் தவடுப்பொடு ஆகிவிட்டன..
சீவக சிந்தாமணியில் முக்தியிலம்பகத்தில் (3070 – 72) சீவகன் ஓராண்டுக் காலம் தவம் செய்தது வர்ணிக்கப்படுகிறது. நந்நான்கு மாதங்கள் கொண்ட மூன்று பருவங்களாக, “”தீயுமிழ் திங்கள் நான்குவானம் நீர்த்திரள் சொரிந்திடு திங்கள் நான்குபனிவரை உருவி வீசும் மங்குல் சூழ் வாடை நான்காய திங்கள்” என ஓராண்டுக்காலம் குறிப்பிடப்படுகிறது. இங்கெல்லாம் கோடைக்காலமே முதலாவது பருவமாகக் குறிப்பிடப்படுவதைக் கவனிக்க வேண்டும்


சித்திரையை முதலாக கொண்டு பகுத்தால்,
தீயுமிழ் திங்கள் நான்கு(கோடைக்காலம்): சித்திரை, வைகாசி, ஆனி,ஆடி
வானம் நீர்த்திரள் சொரிந்திடு  திங்கள் நான்கு(மழைக்காலம்): ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை
பனிவரை உருவி வீசும் மங்குல் சூழ் வாடை நான்காய திங்கள்(பனிக்காலம்):மார்கழி, தை, மாசி, பங்குனி
மிகச்சரியாக பொருந்துகிறது. இதுவே தையை முதலாக கொண்டு பகுத்தால்,
தீயுமிழ் திங்கள் நான்கு(கோடைக்காலம்): தை, மாசி, பங்குனி, சித்திரை
வானம் நீர்த்திரள் சொரிந்திடு  திங்கள் நான்கு(மழைக்காலம்): வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி
பனிவரை உருவி வீசும் மங்குல் சூழ் வாடை நான்காய திங்கள்(பனிக்காலம்):புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி.

கத்திரி வெய்யில் மண்டையை பிளக்கும் வைகாசி மழைக்காலமா? காற்றடிக்கும் ஆடி மாதம் மழைக்காலமா? அடைமழை பொழியும் ஐப்பசி பனிக்காலமா? இப்போதும் சற்றும் பொருந்தாத பகுப்பே வருகிறது. எனவே, இளவேனிலான சித்திரையை முதல் மாதமாக கொள்வதே சிறப்பு.

(தொடரும்)


No comments:

Post a Comment