Friday, 7 August 2015

எது புத்தாண்டு??? பாகம் 1

சித்திரையே(மேழம்) புத்தாண்டு என்பதற்கு சங்க இலக்கியம் முதல், வானியல் ஆதாரங்கள் வரை பல இருந்தும் தை(சுறவம்) மாதமே புத்தாண்டு என்று திராவிடர்கள் கூறிவருகின்றனர். இதன் மூலம் அவர்கள் மறைமுகமாக தமிழர்கள் மீது பண்பாட்டு போர் தொடுத்துள்ளனர் என்பதே உண்மை. சித்திரை(மேழம்) புத்தாண்டு ஆரியர்கள் கொடுத்தது என்று சொல்லுவதன் மூலம், தமிழர்கள் பழங்காலத்தில் எவ்வித வானியல் அறிவும் இன்றி இருந்தனர் என்றும், ஆரியர் வந்தே தமிழருக்கு அறிவு கொடுத்தனர் என்றும், தமிழர்கள் அடிமைகளாகவே இருந்தனர் என்றும் ஒருவிதமான உளவியியல் சதியை செய்து வருகின்றனர். இதன் மூலம் திராவிடர்களே தமிழருக்கு அறிவு ஊட்டுவதாகவும், அதனால், திராவிடர்களே தமிழர்களை ஆளுவதற்கு தகுதியானவர்கள் என்றும் மறைமுகமாக உளவியல் சதி செய்து தமிழர்களை ஆண்டு வருகின்றனர். தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி, “தமிழ் படித்தால் பிச்சைதான் எடுக்க வேண்டும்என்று சொல்லியவர் வழிவந்தவர்கள், உண்மையில் தமிழருக்கு நல்லதை செய்வார்களா? இவர்களா தமிழரின் பண்பாட்டை காப்பார்கள்?? ஆரிய முத்திரை குத்தி தமிழரின் பண்பாட்டை அழிப்பது இது முதல் முறை அல்லவே? தமிழன், சிவன், முருகன், திருமால், இந்திரன், வருணன், கொற்றவை என்று பழங்காலம் முதலே இறைவனை வழிப்பட்டு வந்தவன். ஆனால், தமிழ் கடவுளர் அனைவருக்கும் ஆரிய முத்திரை குத்தி, தமிழர்கள் இறைவனையே வணங்காத, நாடோடிகளாக சுற்றிவந்தவன் என்று முன்பே தன் சதியை அரங்கேற்றிவன் தான் இந்த திராவிடன். அதை சில அடிமை தமிழர்கள் ஏற்றுக்கொண்டனர்.  அடுத்ததாக, தமிழன் தாலியை அறுத்து, தமிழனுக்கு திருமண முறையே இல்லை என்று நிருபித்தான். அதையும் சில அடிமை தமிழர்கள் ஏற்றுக்கொண்டனர். இப்போது அதற்கு அடுத்தப்படியான வேலைகளில் ஈடுப்பட்டவன், தமிழன் இப்போது கொண்டாடும் தமிழ் புத்தாண்டு ஆரிய புத்தாண்டு, திராவிடர்கள் நாங்கள் சொல்லுவதே உண்மையான தமிழ் புத்தாண்டு என்று அடுத்த சதியை அரங்கேற்றி வருகிறான். ஒருவேளை, தை மாதமே புத்தாண்டு இருந்தது என்று, வைத்துக்கொள்வோம், அதை சித்திரைக்கு மாற்றுவதன் மூலம், ஆரியனுக்கு என்ன பயன்? இவர்கள் சொல்வதுப்போல வடக்கிருந்த வந்த ஆரியர்கள்,

வடக்கிலுள்ள குஜராத்தியர், மார்வாடியினர் புத்தாண்டை ஏன் மாற்றவில்லை? வடக்கிலுள்ள குஜராத்தியரும், ராஜஸ்தானியரும் தீபாவளிக்கு அடுத்த நாளைத்தான் புத்தாண்டாக கொண்டாடுகின்றனர். அவர்களின் புத்தாண்டை சித்திரைக்கு மாற்றாமல், ஐப்பசியே புத்தாண்டு என்று ஏன் வைத்துள்ளான்? வடக்கில் இருந்து வந்த ஆரியன்,  வடக்கில் இருக்கும் குஜராத்தியர், மார்வாடியினர் புத்தாண்டை மாற்றாத ஆரியன், தெற்கிலுள்ள தமிழனின் புத்தாண்டை மாற்றிவிட்டானாம். அதை இந்த திராவிடன் கண்டுபிடித்து, தமிழனுக்கு சொல்லிவிட்டானாம். அதனால், இந்த திராவிடன் சொன்ன புத்தாண்டை தமிழன் ஏற்றுக்கொள்ள வேண்டுமாம். விட்டால், ஆரியன் என்று ஒருவன் வருவதற்கு முன் தமிழன் மூக்கால் தான் சாப்பிட்டு வந்தான், ஆரியனின் சூழ்ச்சியால் தமிழன் தற்போது வாயால் சாப்பிடுகிறான். இனி, தமிழன் பழைய நடைமுறைப்படி, மூக்காலயே சாப்பிடவேண்டும் என்று சட்டம் போட்டாலும் போடுவார்கள் போலும். இவர்களின் உன்னத நோக்கம் தமிழரின் பண்பாட்டை அழித்துவிட்டு, ஆங்கிலேய மேற்கத்திய பண்பாட்டை தமிழர்கள் பின்பற்ற வேண்டும் என்பதே. தமிழின காவலர்கள், ஜனவரி 1 அன்று எப்படி எழுச்சியுடன் கொண்டாடி வருகின்றனர் என்று நாடறியும். ஆங்கிலேயன் நாட்டைவிட்டு வெளியேறிய ஆகஸ்டு 15ஐ, கருப்பு தினமாக அனுசரித்தவர்களிடம் இதைத்தான் எதிர்ப்பார்க்க முடியும். இன்று ஜனவரி 15 (தை1) அன்று தமிழ் புத்தாண்டு கொண்டுவருவர். தமிழர் வாய்மூடி இருந்தால், இன்னும் சற்று ஆண்டுகளில், ஜனவரி 1 அன்றே தமிழ் புத்தாண்டு பிறக்கிறது என்று தை 1ஐ, ஜனவரி ஒன்றோடு இணைத்துவிடுவர். அவ்வளவுதான், இவர்கள் பணி முடிந்துவிட்டது. இது ஒன்றும் புதிதல்லவே, இது ஏற்கனவே ஐரோப்பியர் செய்த்துதானே. கிருத்தவ மதத்தை பரப்ப வந்த கொன்ஸ்டான் ஜோசப் பெஸ்கி என்னும் வீரமாமுனிவர் இதை ஏற்கனவே செய்துவிட்டார். அவரது தேம்பாவனி என்னும் நூலில் ஏசு கிருஸ்த்து, மார்கழி 25 அன்று பிறந்தார் என்று கூறுகிறார். அதாவது டிசம்பர் 25ஐ, மார்கழி 25 என்று குறிப்பிடுகிறார். அதேப்போல்தான் , தம்பிரான் வணக்கம் என்னும் கிருத்துவ நூல் வெளியிட்ட போது வெளியீட்டு தேதி ஆங்கிலத்தில் அக்டோபர் 20 என்று குறிப்பிட்டவர்கள், தமிழில் அற்பகை(ஐப்பசி 20) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதோப்போல், தரகம்பாடியில் கண்டெடுக்கப்பட்ட டேனிஷ் தமிழ் ஆவணங்களில், ஜனவரி 1ஐ தை 1 எனவும், பிப்ரவரி 1ஐ மாசி 1 எனவும் குறிப்பிட்டுள்ளனர். அதற்காகத்தான் சிறுபான்மை காவலர், தமிழ் புத்தாண்டை ஜனவரிக்கு மாற்ற துடிக்கராரோ? தமிழனின் கலாச்சாரத்தை ஆங்கில கலச்சாரமாக மாற்றும் முயற்சியான,  இவர்கள் கொண்டு வந்த தைப்புத்தாண்டு சட்டத்தையே, 95% தமிழர்கள் நிராகரித்துவிட்டனர். சித்திரை புத்தாண்டையே மக்கள் எழுச்சியுடன் கொண்டாடினர். அதை அனைத்து தொலைக்காட்சிகளிலும் கண்கூடாக பார்த்தோம். அவர்களின் தொலைக்காட்சியில் என்ன செய்வது என்று தெரியாமல்,  விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள் என்று போட முடியாமல், சித்திரை முதல் நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் என்று போட்டனர். இதே தொலைக்காட்சியினர், வைகாசி முதல் நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் போடுவார்களா? ஆடி முதல் நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் போடுவார்களா? தமிழக மக்கள் தைப்பொங்கலையும் எழுச்சியுடன் கொண்டாடுவர். பொங்கல் திருநாள் கொண்டாட்டங்களை புத்தாண்டு கொண்டாட்டமாக செய்தி வெளியிடும் ஒரே தொலைக்காட்சி, அந்த திராவிடர்களின் தொலைக்காட்சி மட்டுமே. இனி, எதுதான் உண்மையான புத்தாண்டு என்று பார்போம்.


(தொடரும்)

No comments:

Post a Comment