Tuesday, 11 August 2015

எது புத்தாண்டு??? பாகம் 4

தை மாதம் புத்தாண்டு கொண்டாடும் இந்த திராவிடர்கள் வாழ்த்துக்கள் சொல்லும்போது எனக்கு சிரிப்புத்தான் வரும். காரணம், அவர்கள் சொல்லுவது “இனிய தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்”. ஒரே நாளில் இரண்டு விழாக்களை தமிழன் எப்போதாவது கொண்டாடினானா? பொங்கலையே, போகி, சூரியப்பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என்று நாட்களுக்குத்தானே தமிழன் வைத்திருக்கிறான்? அவன் ஒன்றும் சூரியப்பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என்று கொண்டாடியது இல்லையே? பிறகு ஏன் அந்த “மற்றும்உங்களுக்கு தேவைப்படுகிறது. ஏனெனில், பொங்கலோடு புத்தாண்டை இடைச்சொருகப்பார்க்கிறீர்கள். அதனால் தான் அந்த “மற்றும்பெரிதும் தேவைப்படுகிறது. அதனால் தான் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல்!!!! காலங்காலமாக தமிழன் கொண்டிருந்த பழக்கத்தினை மேற்கொண்டால் பிரச்சனை இல்லையே.. தை 1 அன்று, “இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்என்றும், சித்திரை 1 அன்று “இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்என்றும் சொல்லிவிட்டு போலாமே. தை 1 அன்று தான் புத்தாண்டு வேண்டுமென்றால் மற்றும் தேவைப்படும்தான்.
அட, சங்க இலக்கியங்களில் தையை புத்தாண்டாக சொல்ல, ஒரு ஆதாரம் கூட இல்லையா? என்று ஏங்கிக்கொண்டிருந்த போது, திடிரென்று சிலர் ஒரு ஆதாரத்தைக்கொண்டு வந்திருந்தனர்.

     திணை: பாடாண்டிணை. துறை: பரிசிற்றுறை: இயன்மொழியும்,
அரசவாகையுமாம். பிட்டங்கொற்றனைக் கருவூர்க் கதப்பிள்ளை
சாத்தனார் பாடியது.

அருவி யார்க்குங் கழைபயி னனந்தலைக்
கறிவள ரடுக்கத்து மலர்ந்த காந்தட்
கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டிக் கிளையொடு
கடுங்கட் கேழ லுழுத பூழி
நன்னாள் வருபத நோக்கிக் குறவர்
உழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதிணை
முந்துவிளை யாணர் நாட்புதி துண்மார்
மரையான் கறந்த நுரைகொ டீம்பால்
மான்றடி புழுக்கிய புலவுநாறு குழிசி
வான்கே ழிரும்புடை கழாஅ தேற்றிச்
சாந்த விறகி னுவித்த புன்கம்
கூதளங் கவினிய குளவி முன்றிற்
செழுங்கோள் வாழை யகலிலைப் பகுக்கும்
ஊரலக் குதிரைக் கிழவ கூர்வேல்
நறைதார்த் தொடுத்த வேங்கையங் கண்ணி
வடிநவி லம்பின் வில்லோர் பெரும
கைவள் ளீகைக் கடுமான் கொற்ற
வையக வரைப்பிற் றமிழகங் கேட்பப்
பொய்யாச் செந்நா நெளிய வேத்திப்
பாடுப வென்ப பரிசிலர் நாளும்
ஈயா மன்னர் நாண
வீயாது பரந்தநின் வசையில்வான் புகழே. (168)

இதில் என்ன கூறியுள்ளது என்றால்,
     உரை: அருவி ஒலித்திழியும் வேய் பயின்ற அகன்றவிடத்து; மிளகு  கொடி வளரும் மலைச்சாரலினிடத்து;  மலர்ந்த காந்தளினது
கொழுவிய கிழங்கு   பிறழக்கிளறி;   தன் இனத்தோடே கூட; தறுகண்மையையுடைய கேழல் உழுத புழுதிக்கண்ணே;  நல்ல நாள் வந்த செவ்வியைப் பார்த்து;  குறவர் அந்நிலம்
உழாதே அதுவே யுழவாக வித்திய பரிய தோகையையுடைய சிறிய
தினை;  முற்பட விளைந்த புதுவருவாயாகிய கதிரை நல்ல நாளின்கண்ணே புதிதுண்ண வேண்டி; மரையாவைக் கறந்த நுரை கொண்ட இனிய பாலை; மான் தடி புழுக்கப்பட்ட புலால் நாறும் பானையினது; நிணந்தோய்ந்த  வெளிய நிறத்தினையுடைய பெரிய புறத்தைக் கழுவாதே உலை நீராக வார்த்து ஏற்றி; சந்தன விறகான் உவிக்கப்பட்ட சோற்றைகூதாளி கவின் பெற்ற மலைமல்லிகை நாறும் முற்றத்து; வளவிய குலையையுடைய வாழையினது அகன்ற   இலைக்கண்ணே பலருடனே பகுத்துண்ணும்; ஊரப்படாத
குதிரை யென்னும் மலைக்குத் தலைவ;  கூரிய வேலையும்; நறைக்கொடியின் நாரால் தொடுக்கப்பட்ட வேங்கைப் பூமாலையினையும்; வடித்தல் பயின்ற அம்பினையுமுடைய; வில்லாட்களுக்குத் தலைவ;   கையான் வழங்கும் வள்ளிய கொடையினையும் கடியகுதிரையையுமுடைய  கொற்ற;  உலகத் தெல்லையுள் தமிழ்நாடு கேட்க; பொய்யாச் செந்நா நெளிய ஏத்தி - பொய்யாத  செவ்விய  நா வருந்தும்படி வாழ்த்தி; நாடொறும் பாடுவரென்று சொல்லுவர் பரிசிலர்; கொடாதவேந்தர் நாண;  கெடாது பரந்த நினது வசையில்லாத வாலிய புகழை

அதாவது, குதிரைமலையின் வளம் கூறவந்த புலவர் நல்லநாள் வந்தது கருதி, புதிதுண்ணவேண்டிச் சந்தன விறகால் பாலிட்டுப் பொங்கலிட்டு,  பலரும் சேர்ந்துண்ட காட்சியைப் பாடுகிறார். இங்கு, நல்ல நாள் வந்தபோது, மக்கள் பொங்கலிட்டு ஒன்றாக உண்டுள்ளனர். இங்கு எங்குமே, புத்தாண்டு வந்ததால் பொங்கலிட்டு உண்டனர் என்று சொல்லவில்லையே? அல்லது, தை மாதம் வந்ததால் பொங்கலிட்டு உண்டனர் என்று சொல்லவில்லையே!!! அப்படி இருக்கையில், இதை எப்படி தை மாதம் புத்தாண்டு தொடங்கியதிற்கு ஆதாராமாக சொல்ல முடியும். இது எந்த மாதத்தில் வந்த நல்ல நாள் என்று சொல்ல முடியாவிட்டாலும், தை மாதம் வந்த நல்ல நாள் இல்லை என்று உறுதியாக கூறலாம். எப்படி என்று கேட்கிறீர்களா? அந்த பாடலின் 15ஆவது வரியை காணுங்கள்.
நறைதார்த் தொடுத்த வேங்கையங் கண்ணி - நறைக்கொடியின் நாரால் தொடுக்கப்பட்ட வேங்கைப் பூமாலையினையும் : அதாவது, நறைக்கொடியின் நாரால் தொடுக்கப்பட்ட வேங்கைப்பூ மாலையினை அரசன் அணிந்திருக்கிறான். இந்த வேங்கைப்பூ என்பது சித்திரை மாதம் முதல் புரட்டாசி மாதம் வரை மட்டுமே பூக்கும்.ஆனால், தை மாதம் கண்டிப்பாக பூக்காது. சந்தேகம் இருந்தால், தாவரவியில் அறிஞர்களிடம் கேட்டு தெளிவுப்பெற்றுக்கொள்ளலாம். தலைவன், வேங்கைப்பூ மாலை அணிந்திருப்பதாக புலவர் கூறியதன் மூலம், இது தை மாதமாக இருக்காது. பின்பு, எந்த மாதமாக இருக்கும்? சித்திரை மாதமாவோ, ஆடி மாதமாகவோ இருக்கலாம்.
பூம்புகாரில் இந்திர விழாவின் போது சித்திரைச் சித்திரை திங்கள் சேர்ந்தெனக் காவற் பூதத்துக் கடை கெழு பீடிகை புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலும் சொரிந்துமூதிற்  பெண்டிர் வழிப்பட்டனர்”  எனச் சிலப்பதிகாரம், இந்திர விழவூரெடுத்த காதை வரி 64-69களில் குறிப்பிடப்படுகிறது

ஆக, சித்திரை மாதம் நடைப்பெற்ற இந்திர விழாவிலும் தமிழர் பொங்கல் வைத்து வழிப்பட்டுள்ளனர். எனவே, அந்த நல்ல நாள், இந்திர விழாவாகவும் இருக்கலாம். அல்லது, சித்திரை புத்தாண்டில் பொங்கலிட்டு கொண்டாடியாதாகவும் இருக்கலாம், ஏனெனில், ஈழத்தில் உள்ள தமிழர்கள், இன்றும், சித்திரை புத்தாண்டை பொங்கலிட்டு வரவேற்பதை காணலாம். அல்லது, ஆடி மாதம் பொங்கலிடுவதும் இருக்கலாம்.ஆனால், தை மாதம் பொங்கலிட்ட பாடல் இதுவல்ல என்பது மட்டும் உறுதி. வேங்கைப்பூ மாலை குறிப்பிட்ட புலவரை இந்நேரம் அர்ச்சனை செய்து கொண்டிருப்பர் தை மாதம் புத்தாண்டு கொண்டாட துடிப்போர்... இருந்த ஒரு ஆதாரமும் போச்சே.. அட, வடை போச்சே.....
 சரி, தை மாதம் புத்தாண்டு இல்லை என்று சொல்லிவிட்டீர்,,, சித்திரை மாதம் புத்தாண்டு தொடங்கியதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்கிறீர்களா? நிச்சயம் இருக்கிறது.



(தொடரும்)

No comments:

Post a Comment