Tuesday, 11 August 2015

எது புத்தாண்டு??? பாகம் 2


சித்திரையே புத்தாண்டு என்று நிருபிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், காலங்காலமாக சித்திரைதான் முதல் மாதமாக நடைமுறையில் இருந்து வருகிறது. திடிரென்று ஒரு, புது புத்தாண்டு கொண்டு வரும்போதுதான் அதற்கு ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. அதற்காக, நான் சித்திரை மாத புத்தாண்டு ஆதாரங்கள் தராமல் இருக்கப்போவது இல்லை. முதலில், அவர்கள் தை தான் புத்தாண்டு என்று கொடுக்கும் ஆதாரங்களை அலசுவோம். அதன் பிறகு சித்திரை புத்தாண்டு ஆதாரத்திற்கு வருவோம்..

தை மாதம் தான் புத்தாண்டு என்று சொல்லுவோர்,  அறிவியல் பூர்வமான ஒருவாதத்தை எடுத்து வைப்பார்கள். அது என்ன? தை மாதம் தான் சூரியன் தன் தென்செலவு பயணத்தை முடித்துக்கொண்டு, வடசெலவு பயணம் தொடங்கும் என்பதால், அதுதான் புத்தாண்டு என்று. ஏம்பா, அதே சூரியன் தான், ஆடி மாதம் வடசெலவு பயணம் முடித்துக்கொண்டு, தென்செலவு பயணத்தை தொடங்குகிறது. அதற்காக, ஆடி மாதம் புத்தாண்டாகுமா? அது என்ன தைக்கு ஒரு நியாயம், ஆடிக்கு ஒரு நியாயம்? தை, ஆடி இரண்டுமே தமிழருக்கு சிறப்பான மாதம் தான். அதற்காக, அவை தமிழ் புத்தாண்டாக முடியாது. சரி, தை, ஆடி இல்லை, பிறகு எதை புத்தாண்டாக கொள்வது. தை மாதம் வடசெலவை தொடங்கும் சூரியன், ஆடி மாதம் தென்செலவை தொடங்கும் சூரியன், ஐப்பசி மாதம் நீச்சம் அடையும். சித்திரை மாதம் உச்சம் அடையும். அப்படி உச்சம் அடையும் சித்திரையே தமிழருக்கு புத்தாண்டு. பத்தாம் நூற்றாண்டு சோழர் கல்வெட்டிலும் அப்படியே குறிப்பிடப்பட்டுள்ளது. சித்திரை விஷு, ஐப்பசி விஷு, உத்ராயணம்(தை), தட்சணாயணம்(ஆடி).
ஆக, உத்ராயமான தையும், தட்சணாயமான ஆடியும் தமிழருக்கு புத்தாண்டு இல்லை. சூரியன் உச்சம் பெறும் சித்திரையே தமிழருக்கு புத்தாண்டு.
  

அடுத்ததாக , சங்க இலக்கியங்களில் தேடிக்கண்டுப்பிடித்து ஒரு ஐந்து வரிகளை கொடுப்பர்.
தைஇத் திங்கள் தண்கயம் படியும் – நற்றிணை
தைஇத் திங்கள் தண்ணிய தரினும் – குறுந்தொகை
தைஇத் திங்கள் தண்கயம் போல் – புறநானூறு
தைஇத் திங்கள் தண்கயம் போல – ஐங்குறுநூறு
தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ – கலித்தொகை

இதைக்கொடுத்துவிட்டு, இதுதான் புத்தாண்டு ஆதாரம் என்று கொடுப்பர். எல்லா ஜோரா ஒருவாட்டி கையத்தட்டுங்க... இவங்க உண்மையில் கடினப்பட்டு தை தான் புத்தாண்டு என்று நிருபிப்பதற்கு பதிலாக, சித்திரை தான் புத்தாண்டு என்று நிருபித்துள்ளனர். எப்படி என்று பார்க்கிறீர்களா?
எல்லா வரிகளையும் உற்று நோக்குங்க... எங்கேயாவது தை தான் புத்தாண்டு என்றோ, தை தான் ஆண்டின் துவக்கம் என்றோ இருக்கா? இவை தை திங்களைப்பற்றி தான் கூறியிருக்கின்றனத்தவிர தைத்திங்கள் தான் புத்தாண்டு என்று கூறவில்லை. பின் எப்படி சித்திரை திங்கள் தான் புத்தாண்டு என்று பார்ப்போமா? எல்லா வரிகளிலும் என்ன சொல்லியிருக்கிறது, தைமாதத்து குளுமையான குளத்தைப்போல, தை மாதத்து குளுமையான நீரைப்போல, தை மாதம் குளுமையான நீரில் நீராடிஎன்று தான் இருக்கிறது. (தண்மை = குளுமை). எப்போது குளங்களில் குளுமையான நீர் இருக்கும்? பனிக்காலங்களில் போதுதானே? ஆக தை மாதம் பனி பெய்திருக்கிறது. அதானால் குளங்கள் குளுமையாக இருந்திருக்கின்றன. அந்த நீரிலும் விரதம் வேண்டி பெண்கள் நீராடி உள்ளனர். அவ்வளவு தானே, இதற்கும்  புத்தாண்டிற்கும் என்னப்பா தொடர்பு? எனவே காலங்காலமாக கொண்டிருந்த நடைமுறைப்படியே மார்கழி, தை மாதங்கள் முன்பனி என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாசி, பங்குனி = பின்பனி, ஆக, சித்திரை, வைகாசி = இளவேனில். இளவேனிலே புத்தாண்டு தொடங்கும் காலம், எனவே சித்திரையே புத்தாண்டு


அடுத்ததாக தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்லியுள்ளனரே என்பார்கள். யாருக்கு வழி பிறக்கும்? திருமணத்திற்குக் காத்திருக்கும் கன்னிப் பெண்களுக்கு.  கலித்தொகைப் பாடலை பாருங்கள்.
காத்திருக்கும் தலைவனுக்கோ பெண்ணின் கடைக்கண் பார்வை கிடைக்கவில்லை. பாவை ஆடிய இளம் பெண், அவளைப் பார்த்து ஏங்கும் தலைவனைக் காணாள் இல்லை. அவளிடம் மனம் பறிகொடுத்த தலைவன் சொல்கிறான், நீ தையில் நீராடிய தவம் தலைப் படுவாயோ?” (கலித் தொகை 59)
இவளோ என்னைப் பார்க்கவே மாட்டேன் என்கிறாள். ஆனால், வருடம் தோறும், தையில் நீராடி, நல்ல கணவன் வேண்டும் என்று மட்டும் வேண்டிக் கொள்கிறாள். என்னைக் காணாது இருக்கையில், தை நீராடி தவம் இருந்து என்ன பயன்?” என்று நக்கல் பேச்சு பேசுகிறான். இப்படியெல்லாம் அக வாழ்கையின் ரசனை ததும்ப ஓடும் கருத்துக்களைக் கொண்டதால் அந்த மாதமே வருடப் பிறப்பு என்று எப்படி சொல்லலாம்?  இந்த தைநீரால் என்பது, தை முதல் தேதியில் தொடங்காது, மார்கழி மாதம் முழுநிலவிலேயே தொடங்கி, தைமாதம் வரை நீடித்து, தைப்பூசத்தன்று முடியும். ஆண்டாளே, திருப்பவையில், “மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர்!என்று சொல்லியதன் மூலம், மார்கழி முதல் நாளில் நீராட துவங்கவில்லையென்றும், மார்கழி முழுமதியில் நீராட துவங்கி, தைமாதம் வரை நீராடியுள்ளனர் என்று தெரிகிறது. அப்படி, இந்த பாவை நோன்பு முடித்த பெண்களுக்கு, தை மாதத்தில் நல்ல வழி பிறக்கும் என்பதே அந்த பழமொழியின் உண்மை. 

மேலும் தையை தொடர்ந்து வரும், மாசி மாதம் எப்படிப்பட்டது? மாகூர் திங்கள் என்னும் பதிற்றுப் பத்து பாடல் (59), மாக்கள் குளிர் தாங்காமல் உடலைக் குறுக்கிகொள்ளும் மாசி மாதம், மாகூர் மாசியாகும் என்கிறது. அந்தப் பாடலில், பாணன் எப்பொழுதுதான் குளிர் நீங்கி, வெயில் வரும் எனக் காத்திருக்கிறான். பொதுவாக, விடியலுக்கு முன்னாலேயே பாணர்கள் அரசனைக் காணக் கிளம்பி விடுவர். அப்பொழுதான், வெயிலுக்கு முன் அரண்மனை சென்று அடைய முடியும். ஆனால் மாசி மாதத்தில் விடிகாலையில் கிளம்ப முடிவதில்லை. குளிரும் பனியும் அதிகம். மேலும் மாசித் தன்மை உடையதால் அது மாசி என்று உரை காரர் கூறுகிறார். மாசி என்றால் மேகம் என்றும் பொருள். மேகமே இறங்கி வந்தாற்போல், பனி மூட்டம் நிலத்தின் மீது பரவி இருப்பதால் அது மாசி என்றாயிற்று.
நெடு நல் வாடையிலும், (6) மாமேயல் மறப்ப, மந்தி கூற என்று கூறுகிறது. மாசி மாதம், மாடுகள் குளிர் காரணமாக மேயச் செல்லாது மந்தி உடலைக் குறுக்கிக் கொண்டு இருக்கும். 
தையும் மாசியும் வையகத்து உறங்கு என்று பதிற்றுப் பத்து உரைகாரர் கூறுகிறார்.
இப்படி, பனி பெய்து குளிரால் நடுங்கும், மார்கழி, தை, மாசி ஆகிய மாதங்கள் புத்தாண்டாக இருக்க முடியுமா?? எனவே, இளவேனில் தொடங்கும் சித்திரையே புத்தாண்டு.


(தொடரும்)

No comments:

Post a Comment