Tuesday, 11 August 2015

எது புத்தாண்டு??? பாகம் 6


மேலும் சித்திரை புத்தாண்டை குறை சொல்லும் திராவிடர்கள், நாரதர், பெண்ணாக மாறி, கிருஷ்ணனுடன் சேர்ந்து, பெற்ற குழந்தைகளே அறுபது வருடங்கள். எனவே, அந்த அறுபது வருடங்கள் எங்களுக்கு தேவையில்லை என்று கூறுவர். உண்மையில், இந்த நாரதர்-கிருஷ்ணர் கதை எங்கிருக்கிறது? சங்க இலக்கியத்திலா? ஐப்பெரும் காப்பியங்களிலா? வானியல் நூட்களிலா? எங்குதான் இருக்கிறது என்று பார்த்தால், “அபிதான சிந்தாமணிஎன்ற நூலில் இருக்கிறது. அது எவ்வளவு பழமையான புத்தகம் என்று தெரியுமா? அந்த புத்தகம் வெளியான ஆண்டு, 1932. ஆக, தையை புத்தாண்டாக, மாற்ற விரும்பியோர், இந்த கதையை கட்டி விட்டிருப்பர். இங்கு நோக்கத்தக்கது என்னவென்றால், இந்த கதைக்காக யாரும் புத்தாண்டு கொண்டாடுவதில்லை. ஒரு ஆண்டில் 12 மாதங்கள் முடிந்து, அடுத்த ஆண்டு தொடங்குவதை குறிக்கவே புத்தாண்டு கொண்டாடுகின்றனர். புராண, சடங்குகளில் சற்றும் நம்பிக்கை இல்லாத சித்தர்கள் இந்த அறுபது ஆண்டுகளை பயன்படுத்தினர் என்பது தெரியுமா? இடைக்காட்டு சித்தர், தன் வருடாதி வெண்பா என்னும் நூலில், இந்த 60 வருடங்களுக்கும் மழை, வெய்யில் எப்படி இருக்கும் என்பதை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே எழுதிவிட்டார். இந்த 60 ஆண்டுகள், விவசாயிகளுக்காக சித்தர்கள் அருளியதே தவிர, கட்டுக்கதைகள் அல்ல. உதாரணத்திற்கு இந்த வருடமான மன்மத வருட பாடலில் இடைக்காட்டு சித்தர் என்ன கூறியிருக்கிறார் என்று பார்ப்போம்.
இடைக்காட்டு சித்தர் எழுதிய 'மன்மத வருட வெண்பா'
மன்மதத்தில் மாரியுண்டு வாழுமுயிரெல்லாமே
நன்மைமிகும் பல்பொருளை நண்ணுமே மன்னவரால்
சீனத்திற் சண்டையுண்டு தென்திசையிற் காற்றுமிகும்
கானப்பொருள் குறையுங் காண்.

பொருள்: இந்த மன்மத ஆண்டில் நல்ல மழை பொழியும். மரம்செடி,கொடிவிலங்குபறவை மட்டுமல்லாமல் அனைத்து உயிர்களும்  நலமுடன் வாழும். மக்களும் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். நல்லதெல்லாம் நடைபெறும்.பலவகையான தானியங்கள்பயிர்கள் விளைச்சல் அமோகமாக இருக்கும். நாடாளும் நபர்களுக்கு போர் குணம் அதிகரிக்கும். அதன் விளைவாக உலகின் ஒரு பகுதியில் பிரச்சினைகள் உருவாகும். தென் திசையிலிருந்து புயல் உருவாகி சூறாவளிக் காற்றாக வீசும். இதன் விளைவாக மிக அரிதான விளைபொருட்கள்மூலிகைகள்  சேதமடைந்து குறையலாம்.
இதுப்போலத்தான்  ஒவ்வொரு வருடத்திற்கும் அந்த ஆண்டு வானிலை எப்படி இருக்கும் என்பதை சித்தர் எழுதி வைத்துள்ளார். இப்படிப்பட்ட சித்தர்களின் வானியியல் அறிவைத்தான் அழிக்கத் துடிக்கின்றனர் இந்த திராவிடர்கள். ஒரு வேளை சித்தர்களும் ஆரியர்களோ என்னவோ? சீனர்களும் இந்த அறுபது ஆண்டு சுழற் கணக்கை பயன்படுத்தி வந்துள்ளனர். தமிழ் சித்தர் போகர், சீனா சென்று அங்குள்ள மக்களுக்கு நல்லவைகளை செய்தது நினைவிருக்கலாம். இந்த 60 ஆண்டுகளுக்கு தமிழ் பெயர்கள் இருக்கையில் அதையே பயன்படுத்தலாமே.?



இந்த 60 ஆண்டு சுழற் கணக்கு பிடிக்காதவர்கள், ஏன் அதை பின்பற்ற வேண்டும்? ஏசு கிருஸ்த்து எப்படி டிசப்பர் 25ல் பிறந்தாலும், அந்த ஆண்டின் தொடக்கமான ஜனவரி 1லேயே கிருஸ்த்துவ ஆண்டு துவங்கிவிடுமோ, அதுப்போல, திருவள்ளுவர் நாள் தை 2ஆம் நாள் இருந்தாலும், அந்த ஆண்டின் முதல் மாதமான சித்திரையிலேயே திருவள்ளுவர் ஆண்டு தொடக்கத்தை கொண்டு, சித்திரை புத்தாண்டைக் கொள்ளலாமே. திருவள்ளுவர் ஆண்டை வரவேற்கலாமே?

தைப்புத்தாண்டு சொல்லும் திராவிட வாதிகள், பாவேந்தர் பாரதிசான்(1891-1964) சொன்ன நித்திரையில் இருக்கும் தமிழா, சித்திரையல்ல உனக்கு புத்தாண்டுஎன்ற வாசகத்தை பரவலாக தங்கள் பிரச்சாரதில்  மேற்க்கோள் காட்டுவர். உண்மையில், பாரதிதாசன் அவர்கள், பெரியாரின்  தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அது ஆரிய-திராவிட இனவாதத்தில் மேலோங்கி இருந்த காலம் அது. ஆகவே, தமிழனின் அனைத்தும் பண்பாடும் ஆரிய திணிப்பே என்று நினைத்து அப்படிக்கூறிவிட்டார். எனவே, தமிழ் மீது பற்றுக் கொண்டிருந்தாலும், திராவிடன் என்ற உணர்வு கொண்டிருந்த பாவேந்தரின் தைப்புத்தாண்டு வாதத்தை தமிழர் என்ற முறையில் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை.
ஆனால் “தமிழன் என்றோர் இனமுன்று தனியே அதற்கோர் குணமுண்டுஎன்றும் “தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடாஎன்ற வாசகங்களின் சொந்தக்காரும், திராவிடன் என்பதைவிட, தமிழன் என்று வாழ்ந்தவரும், பாவேந்தர் பாரதிதாசன் காலத்திலேயே வாழ்ந்தவரும் , தமிழ் நாட்டின் முதல் “அரசவை கவிஞர்என்ற பெருமையை உடையவருமான நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்(1888-1972).  புத்தாண்டைப்பற்றி  என்ன சொல்கிறார்?
  ''சித்திரை மாதத்தில் புத்தாண்டு; தெய்வம் திகழும் திருநாட்டில்'' 
எனவே, தமிழ்நாட்டின் முதல் அரசவை கவிஞரே, சித்திரையையே புத்தாண்டாக சொல்கிறார்.
ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு வரும்போது, அனைத்து இனங்களும் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக்கொள்வர். ஆனால், இந்த தமிழினமோ, திராவிடனின் சூழ்ச்சியால், புத்தாண்டு வரும்போதெல்லாம், புத்தாண்டு வாழ்த்துகளை சொல்லாமல், எது புத்தாண்டு என்று பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கின்றனர். இதைவிட கேவலம் என்ன இருக்கப்போகிறது.

  
இதற்கு என்னத்தான், தீர்வு? தமிழனுக்கு தொடர் ஆண்டு முறை தேவைதான். அதற்காக புத்தாண்டை மாற்ற வேண்டுமா என்ன? அனைவரும் சித்திரை திங்களை புத்தாண்டாக ஏற்றுக்கொண்டு, அய்யன் வள்ளுவனின் சகாப்தத்தை பின்பற்றி திருவள்ளுவராண்டு முறையை கொள்வதே சரி. இதனால், இருதரப்புக்கும் பிரச்சனை இல்லையே? சித்திரையில் ஆண்டும் பிறக்கிறது. திருவள்ளுவராண்டும் பின்பற்றப்படுகிறது.
வரும் , சித்திரை 1 அன்று,(14/4/2016) அனைவரும் தமிழர் என்ற ஒற்றுமையுடன், 2047 ஆம் ஆண்டை வரவேற்போம்!!!!
“இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் -2047என்று தமிழகம் முழுவதும் ஒரேக்குரலாய் ஒலிக்க வேண்டும் என்பதே, என் அவா!!!
ஒன்றுப்பட்டால் உண்டு வாழ்வு!!! நம்மில் ஒற்றுமை நீங்கில், அனைவருக்கும் தாழ்வு!!!

(முற்றும்)

எது புத்தாண்டு??? பாகம் 5



முதலில், ஒரு மாதம் எப்படி தொடங்குவது என்று, பார்ப்போம். ஆண்டு முறைகள் பொதுவாக இரண்டு முறைகள் இந்தியாவில் பின்பற்றப்பட்டு வருகின்றன. ஒன்று, சூரியமான முறை, மற்றொன்று சந்திரமான முறை. இதில், தெலுங்கர், கன்னடர், வட இந்தியர் சந்திரமான புத்தாண்டையே கொண்டாடுவர். தமிழர், மலையாளிகள், ஒரியர், வங்கர், மற்றும் சோழர் ஆண்ட கம்போடியா, பர்மா, தாய்லாந்து, இலங்கை ஆகியோர் சூரியமான முறை புத்தாண்டையே கொண்டாடுவர்.
சந்திரமான முறையை பின்பற்றுவோர், தங்கள் மாதம் எப்படி பிறக்கும் என்றால், ஒரு அமாவசையிலிருந்து அடுத்த அமாவாசை வரை ஒரு மாதமாக கொள்வர் அல்லது ஒரு பூரணையிலிருந்து அடுத்த பூரணை.
சூரியமான முறையை பின்பற்றுவோர், சூரியன் ஒரு இராசியில் நுழைந்து, அதிலிருந்து வெளியேறும் காலம் வரை ஒரு மாதமாக கொள்வர். இதில் இராசி என்றால் என்னவென்று  பார்ப்போம். வானில், நட்சத்திரக் கூட்டங்கள் நிலையாக இருக்கும். இப்படி, நிலையாக இருக்கும் நட்சத்திரக் கூட்டங்களை 12ஆக பிரித்து வைத்து, ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பெயரை சூட்டியுள்ளனர். அதன் பெயரே, இராசி என்று கூறுகிறோம் அல்லது ஓரை என்று கூறுகிறோம். படத்தை காண்க...




இந்த இராசி பெயர்களே சூரியமான மாதப்பெயர்கள். இன்றும் சேரர்களான கேரளவர், மேடம், இடபம் என்று இராசி பெயர்களையே தங்கள் மாதப்பெயர்களாக கொண்டுள்ளனர்.
இதில் முதல் இராசியே, மேழம்/மேடம்.சூரியன், இந்த இராசியில் நுழையும் மாதமே புத்தாண்டு. எவ்வளவு அறிவியல் பூர்வமான புத்தாண்டு என்று பாருங்கள். சரி, இந்த மேழ இராசிதான் எப்படி முதல் மாதம் கொள்வதென்று கேட்கிறீர்களா? அதற்கு நக்கீரன், தன் சங்க இலக்கியமான நெடுநெல்வாடை நூலில் விடைக்கூறிவிட்டார்.
திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலம்” என்பது சங்க இலக்கியமாகிய நெடுநல்வாடையில் இடம்பெறும் தொடராகும். (வரி 160 – 161)

வான்மண்டலத்தில், சூரியன் ஆட்டை(மேழம்) தலையாக(முதலாக) கொண்டு சுற்றிவருகிறது என்று நக்கீரர் கூறுகிறார். எனவே, மேழமே(சித்திரை) முதல் மாதம் என்று புலப்படுகிறது. மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கின்ற மாதத் தொடக்கமே புத்தாண்டின் தொடக்கமாகும். ரோமானிய நாகரிகத்தில் முதல் மாதமாகக் கருதப்பட்ட ஏரீஸ்என்பது ஆடு (மேஷம்) என்றே பொருள்படும். உலகம் முழுவதும் மேழத்தையே( ஏரிஸ்/மார்ச்சு) புத்தாண்டாக கொண்டிருந்தனர். செப்டம்பர்,அக்டோபர், நவம்பர், திசம்பர் என்பது 7வது, 8வது, 9வது, 10வது மாதங்களின் பெயரையே குறிக்கும். சப்த-7, அஷ்ட-8, நவ-9, தச-10. ஜனவரி 11வது மாதமாகவும், 12 ஆவது மாதமாகவும் இருந்தது. எனவேதான் இறுதி மாதமான பிப்ரவரி திங்களில் குறைவான நாட்கள் உள்ளதை காணலாம். பின்புதான், ஜனவரி மாதம் முதல் மாதமாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு அறிவியல் காரணம் இல்லாமல், சமய காரணமே உள்ளது. சரி, அது அவர்கள் பிரச்சனை, நம் பிரச்சனைக்கு வருவோம்..
சரி, நக்கீரர் கூறிய சங்க இலக்கிய ஆதாரத்தைப் பார்த்தோம். அடுத்து, திராவிடர்கள், சங்க இலக்கிய ஆதாரங்களைக்கூட எடுத்துக்கொள்ள மாட்டர். அதுவும் ஆரிய மாயை என்று கூறினாலும் கூறுவர். அவர்களுக்காக தமிழ் சித்தரான அகத்தியர் தன் பன்னீராயிரம் என்னும் நூலில் என்னக்கூறியுள்ளார் என்று பார்ப்போம்.
"மேடமென்னும் ராசியாம் மதனிற்கேளு
மேலானா யசுவினி முதலாம்பாதம்
குலவியே கதிரவந்தான் வந்துதிக்க
வருச புருசன் அவதரிப்பானென்றே
பரிவுடன் உலகிற்கு நீசாற்றே" என்கிறார் அகத்தியர்.
ஆக, மேழ(சித்திரை) மாதத்திலேயே வருடம் பிறக்கிறது என்று தமிழ் சித்தரான அகத்தியரே உறுதிப்படுத்துகிறார்.
அடுத்து, தமிழில் ஐம்பெரும்காப்பியங்களுல் ஒன்றான புத்த சமய நூலான மணிமேகலை என்ன கூறுகிறது என்றுக் காண்போம்.
அட்டவனை 1: சித்திரை புத்தாண்டு
இளவேனில்: சித்திரை, வைகாசி
முதுவேனில்:ஆனி,ஆடி
கார்: ஆவணி,புரட்டாசி
கூதிர்: ஐப்பசி, கார்த்திகை
முன்பனி:மார்கழி, தை
பின்பனி: மாசி, பங்குனி
அட்டவனை 1ன் படி, சித்திரையை புத்தாண்டாக கொண்டால்,  இளவேனிலில் சித்திரை, வைகாசி என்பதே இருக்கிறது. மணிமேகலையில், வைகாசி(இடபம்) இளவேனில் என்பதற்கு ஆதாரம் உள்ளது.
இருது இளவேனிலில் எரிகதிர் இடபத்து
ஒரு பதின் மேலும் ஒரு மூன்று சென்றபின்
மீனத்து இடைநிலை மீனத்து அகவையின்
போதித் தலைவனோடு பொருந்தி..
அதாவது, இளவேனில் காலத்தில், சூரியன் இடபம்(வைகாசி)யில் பதிமூன்று நாள் சென்றப்பின், விசாக நாளில் புத்தர் பிறந்தார் என்று சீத்தலை சாத்தனார் கூறுகிறார். இதன் மூலம், சித்திரை, வைகாசி ஆகியவை இளவேனில் மாதங்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டு, இளவேனிலே புத்தாண்டு துவக்கம் என்பதால், சித்திரையே புத்தாண்டு என்று உறுதிப்படுத்தப்படுகிறது.
சமண சமய நூலான சிலப்பதிகாரமும், இராசிகளை வரிசைப்படுத்தும்போது, மேழத்தையே முதன்மையாக கூறுகிறது.

ஆக, வேத முறையை பின்பற்றிய தமிழர்கள், சித்தர் நெறியை பின்பற்றிய தமிழர்கள், சமண சமயத்தை பின்பற்றிய தமிழர்கள், பெளத்த நெறியை பின்பற்றிய தமிழர்கள் அனைவருக்கும் சித்திரையே புத்தாண்டாக இருந்துள்ளது.  தையை புத்தாண்டாக வைக்க கூறுவோர், சித்திரை புத்தாண்டு மத தொடர்புள்ளது, எனவே, கிருத்தவர்கள், இஸ்லாமியர் என அனைவருக்கும் பொதுவாய் இருக்கும் தைக்கு மாற்ற வேண்டும் என்று சொல்லுவர். உங்களை யார் சித்திரை புத்தாண்டிற்கு மத சாயம் பூச சொன்னது?? இந்துக்கள், சமணர்கள், பெளத்தர்கள் என அனைவரும் ஒன்றாகத்தானே, சமய வேறுபாடு இன்றி புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். அதே நாளில் கிருத்தவர்களும், முஸ்லீம்களும் புத்தாண்டு கொண்டாடலாமே? யாரும் தடை விதிக்கப்போவதில்லையே?? எப்படியோ, கிருத்தவர்கள், ஜனவரி 1ஐயும், இஸ்லாமியர்கள், முஹரம் 1ஐயும் தான் புத்தாண்டாக அனுசரிக்க போகிறார்கள். மதம் கடந்து, சில தமிழுணர்வு கொண்ட கிருஸ்த்தவ, இஸ்லாமியர், தமிழ் புத்தாண்டு கொண்டாட வேண்டுமென்றால், சித்திரையில் புத்தாண்டு இருந்தால் என்ன? தையில் புத்தாண்டு இருந்தால் என்ன? தமிழ் புத்தாண்டு கொண்டாட வேண்டும் என்று உண்மையில் விழைவு இருந்தால், சித்திரையிலேயே புத்தாண்டு கொண்டாடலாமே... தவறில்லையே? யாரும் தடுக்கப்போவதில்லையே..

(தொடரும்)


எது புத்தாண்டு??? பாகம் 4

தை மாதம் புத்தாண்டு கொண்டாடும் இந்த திராவிடர்கள் வாழ்த்துக்கள் சொல்லும்போது எனக்கு சிரிப்புத்தான் வரும். காரணம், அவர்கள் சொல்லுவது “இனிய தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்”. ஒரே நாளில் இரண்டு விழாக்களை தமிழன் எப்போதாவது கொண்டாடினானா? பொங்கலையே, போகி, சூரியப்பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என்று நாட்களுக்குத்தானே தமிழன் வைத்திருக்கிறான்? அவன் ஒன்றும் சூரியப்பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என்று கொண்டாடியது இல்லையே? பிறகு ஏன் அந்த “மற்றும்உங்களுக்கு தேவைப்படுகிறது. ஏனெனில், பொங்கலோடு புத்தாண்டை இடைச்சொருகப்பார்க்கிறீர்கள். அதனால் தான் அந்த “மற்றும்பெரிதும் தேவைப்படுகிறது. அதனால் தான் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல்!!!! காலங்காலமாக தமிழன் கொண்டிருந்த பழக்கத்தினை மேற்கொண்டால் பிரச்சனை இல்லையே.. தை 1 அன்று, “இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்என்றும், சித்திரை 1 அன்று “இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்என்றும் சொல்லிவிட்டு போலாமே. தை 1 அன்று தான் புத்தாண்டு வேண்டுமென்றால் மற்றும் தேவைப்படும்தான்.
அட, சங்க இலக்கியங்களில் தையை புத்தாண்டாக சொல்ல, ஒரு ஆதாரம் கூட இல்லையா? என்று ஏங்கிக்கொண்டிருந்த போது, திடிரென்று சிலர் ஒரு ஆதாரத்தைக்கொண்டு வந்திருந்தனர்.

     திணை: பாடாண்டிணை. துறை: பரிசிற்றுறை: இயன்மொழியும்,
அரசவாகையுமாம். பிட்டங்கொற்றனைக் கருவூர்க் கதப்பிள்ளை
சாத்தனார் பாடியது.

அருவி யார்க்குங் கழைபயி னனந்தலைக்
கறிவள ரடுக்கத்து மலர்ந்த காந்தட்
கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டிக் கிளையொடு
கடுங்கட் கேழ லுழுத பூழி
நன்னாள் வருபத நோக்கிக் குறவர்
உழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதிணை
முந்துவிளை யாணர் நாட்புதி துண்மார்
மரையான் கறந்த நுரைகொ டீம்பால்
மான்றடி புழுக்கிய புலவுநாறு குழிசி
வான்கே ழிரும்புடை கழாஅ தேற்றிச்
சாந்த விறகி னுவித்த புன்கம்
கூதளங் கவினிய குளவி முன்றிற்
செழுங்கோள் வாழை யகலிலைப் பகுக்கும்
ஊரலக் குதிரைக் கிழவ கூர்வேல்
நறைதார்த் தொடுத்த வேங்கையங் கண்ணி
வடிநவி லம்பின் வில்லோர் பெரும
கைவள் ளீகைக் கடுமான் கொற்ற
வையக வரைப்பிற் றமிழகங் கேட்பப்
பொய்யாச் செந்நா நெளிய வேத்திப்
பாடுப வென்ப பரிசிலர் நாளும்
ஈயா மன்னர் நாண
வீயாது பரந்தநின் வசையில்வான் புகழே. (168)

இதில் என்ன கூறியுள்ளது என்றால்,
     உரை: அருவி ஒலித்திழியும் வேய் பயின்ற அகன்றவிடத்து; மிளகு  கொடி வளரும் மலைச்சாரலினிடத்து;  மலர்ந்த காந்தளினது
கொழுவிய கிழங்கு   பிறழக்கிளறி;   தன் இனத்தோடே கூட; தறுகண்மையையுடைய கேழல் உழுத புழுதிக்கண்ணே;  நல்ல நாள் வந்த செவ்வியைப் பார்த்து;  குறவர் அந்நிலம்
உழாதே அதுவே யுழவாக வித்திய பரிய தோகையையுடைய சிறிய
தினை;  முற்பட விளைந்த புதுவருவாயாகிய கதிரை நல்ல நாளின்கண்ணே புதிதுண்ண வேண்டி; மரையாவைக் கறந்த நுரை கொண்ட இனிய பாலை; மான் தடி புழுக்கப்பட்ட புலால் நாறும் பானையினது; நிணந்தோய்ந்த  வெளிய நிறத்தினையுடைய பெரிய புறத்தைக் கழுவாதே உலை நீராக வார்த்து ஏற்றி; சந்தன விறகான் உவிக்கப்பட்ட சோற்றைகூதாளி கவின் பெற்ற மலைமல்லிகை நாறும் முற்றத்து; வளவிய குலையையுடைய வாழையினது அகன்ற   இலைக்கண்ணே பலருடனே பகுத்துண்ணும்; ஊரப்படாத
குதிரை யென்னும் மலைக்குத் தலைவ;  கூரிய வேலையும்; நறைக்கொடியின் நாரால் தொடுக்கப்பட்ட வேங்கைப் பூமாலையினையும்; வடித்தல் பயின்ற அம்பினையுமுடைய; வில்லாட்களுக்குத் தலைவ;   கையான் வழங்கும் வள்ளிய கொடையினையும் கடியகுதிரையையுமுடைய  கொற்ற;  உலகத் தெல்லையுள் தமிழ்நாடு கேட்க; பொய்யாச் செந்நா நெளிய ஏத்தி - பொய்யாத  செவ்விய  நா வருந்தும்படி வாழ்த்தி; நாடொறும் பாடுவரென்று சொல்லுவர் பரிசிலர்; கொடாதவேந்தர் நாண;  கெடாது பரந்த நினது வசையில்லாத வாலிய புகழை

அதாவது, குதிரைமலையின் வளம் கூறவந்த புலவர் நல்லநாள் வந்தது கருதி, புதிதுண்ணவேண்டிச் சந்தன விறகால் பாலிட்டுப் பொங்கலிட்டு,  பலரும் சேர்ந்துண்ட காட்சியைப் பாடுகிறார். இங்கு, நல்ல நாள் வந்தபோது, மக்கள் பொங்கலிட்டு ஒன்றாக உண்டுள்ளனர். இங்கு எங்குமே, புத்தாண்டு வந்ததால் பொங்கலிட்டு உண்டனர் என்று சொல்லவில்லையே? அல்லது, தை மாதம் வந்ததால் பொங்கலிட்டு உண்டனர் என்று சொல்லவில்லையே!!! அப்படி இருக்கையில், இதை எப்படி தை மாதம் புத்தாண்டு தொடங்கியதிற்கு ஆதாராமாக சொல்ல முடியும். இது எந்த மாதத்தில் வந்த நல்ல நாள் என்று சொல்ல முடியாவிட்டாலும், தை மாதம் வந்த நல்ல நாள் இல்லை என்று உறுதியாக கூறலாம். எப்படி என்று கேட்கிறீர்களா? அந்த பாடலின் 15ஆவது வரியை காணுங்கள்.
நறைதார்த் தொடுத்த வேங்கையங் கண்ணி - நறைக்கொடியின் நாரால் தொடுக்கப்பட்ட வேங்கைப் பூமாலையினையும் : அதாவது, நறைக்கொடியின் நாரால் தொடுக்கப்பட்ட வேங்கைப்பூ மாலையினை அரசன் அணிந்திருக்கிறான். இந்த வேங்கைப்பூ என்பது சித்திரை மாதம் முதல் புரட்டாசி மாதம் வரை மட்டுமே பூக்கும்.ஆனால், தை மாதம் கண்டிப்பாக பூக்காது. சந்தேகம் இருந்தால், தாவரவியில் அறிஞர்களிடம் கேட்டு தெளிவுப்பெற்றுக்கொள்ளலாம். தலைவன், வேங்கைப்பூ மாலை அணிந்திருப்பதாக புலவர் கூறியதன் மூலம், இது தை மாதமாக இருக்காது. பின்பு, எந்த மாதமாக இருக்கும்? சித்திரை மாதமாவோ, ஆடி மாதமாகவோ இருக்கலாம்.
பூம்புகாரில் இந்திர விழாவின் போது சித்திரைச் சித்திரை திங்கள் சேர்ந்தெனக் காவற் பூதத்துக் கடை கெழு பீடிகை புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலும் சொரிந்துமூதிற்  பெண்டிர் வழிப்பட்டனர்”  எனச் சிலப்பதிகாரம், இந்திர விழவூரெடுத்த காதை வரி 64-69களில் குறிப்பிடப்படுகிறது

ஆக, சித்திரை மாதம் நடைப்பெற்ற இந்திர விழாவிலும் தமிழர் பொங்கல் வைத்து வழிப்பட்டுள்ளனர். எனவே, அந்த நல்ல நாள், இந்திர விழாவாகவும் இருக்கலாம். அல்லது, சித்திரை புத்தாண்டில் பொங்கலிட்டு கொண்டாடியாதாகவும் இருக்கலாம், ஏனெனில், ஈழத்தில் உள்ள தமிழர்கள், இன்றும், சித்திரை புத்தாண்டை பொங்கலிட்டு வரவேற்பதை காணலாம். அல்லது, ஆடி மாதம் பொங்கலிடுவதும் இருக்கலாம்.ஆனால், தை மாதம் பொங்கலிட்ட பாடல் இதுவல்ல என்பது மட்டும் உறுதி. வேங்கைப்பூ மாலை குறிப்பிட்ட புலவரை இந்நேரம் அர்ச்சனை செய்து கொண்டிருப்பர் தை மாதம் புத்தாண்டு கொண்டாட துடிப்போர்... இருந்த ஒரு ஆதாரமும் போச்சே.. அட, வடை போச்சே.....
 சரி, தை மாதம் புத்தாண்டு இல்லை என்று சொல்லிவிட்டீர்,,, சித்திரை மாதம் புத்தாண்டு தொடங்கியதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்கிறீர்களா? நிச்சயம் இருக்கிறது.



(தொடரும்)

எது புத்தாண்டு??? பாகம் 3


அட்டவனை 1: சித்திரை புத்தாண்டு
இளவேனில்: சித்திரை, வைகாசி
முதுவேனில்:ஆனி,ஆடி
கார்: ஆவணி,புரட்டாசி
கூதிர்: ஐப்பசி, கார்த்திகை
முன்பனி:மார்கழி, தை
பின்பனி: மாசி, பங்குனி
அட்டவனை 2: தை புத்தாண்டு
இளவேனில்: தை, மாசி
முதுவேனில்: பங்குனி, சித்திரை
கார்: வைகாசி, ஆனி
கூதிர்: ஆடி, ஆவணி
முன்பனி: புரட்டாசி, ஐப்பசி
பின்பனி: கார்த்திகை, மார்கழி

தைப்புதாண்டு என்று சொல்லுவோர், அட்டவணை 2ஐ பாருங்கள். கார்காலம்(மழைக்காலம்) எப்போது இருக்கிறது. வைகாசி, ஆனியா? வைகாசி மழைக்காலம் என்றால் குழந்தைக்கூட சிரிக்கும். சித்திரை இறுதியில் தொடங்கும் கத்திரி வெய்யில் வைகாசி மாதம் பாதி வரை நீடிக்கும். வெய்யில் உக்கிரமாக இருக்கும் வைகாசியை கார்காலம் என்று சொன்னால், குழந்தைக்கூட சிரிக்காதா என்ன? அடுத்து, கூதிர் காலத்தை பாருங்கள்.ஆடி, ஆவணி.  ஆடிமாதம் காற்றில் அம்மியும் பறக்கும்என்பர், “ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை பொழியும்என்பது மூலம், ஆடி மாதம் காற்றடிக்கும் மாதமே அன்றி, அது, குளிர்ந்த காலம்(கூதிர் காலம்) அன்று.
ஐப்பசி மாதம் அடைமழை என்பர்” ,அப்படிப்பட்ட ஐப்பசி எங்கு இருக்கிறது என்று பாருங்கள், முன்பனியில். இப்படி, தையை முதலாக கொண்டால், சற்றும் பொருந்தாத ஆறுபருவங்கள் தான் இருக்கின்றன.

இதுவே சித்திரையை முதலாக கொண்டு பார்த்தால், சரியாக உள்ளது. இளவேனிலில் சித்திரை, வைகாசி, முதுவேனிலில் ஆனி,ஆடி, (முதுமை + வேனில்). ஒரு முதியவன் எப்படி சக்தியற்று இருப்பானோ, அப்படித்தான் இந்த மாதங்களில் வெயில் சக்தியற்று குறைவாக இருக்கும். ஆவணி, புரட்டாசியில் மழைப்பெய்யத்தொடங்கும். ஆனால், இது குளிர்ச்சியைத்தராது, நான்குமாதம் அடித்த வெய்யிலில், நிலம் நன்றாக சூடாகி இருக்கும். பெய்யும் சிறிதளவு மழையில் உஷ்ணத்தை கிளப்பி விடத்தான் செய்யுமேத் தவிர பூமியை குளிர்விக்காது. பின்பு ஐப்பசியில் ஆரம்பிக்கும் அடைமழையில்தான் பூமி குளிர்ச்சி அடையும். ஆக, ஐப்பசி, கார்த்திகை கூதிர் காலம்(பூமி குளிரும் காலம்), மார்கழி, தை என்பது முன்பனி என்பதை முன்பே பார்த்தோம். இறுதியில், மாசி, பங்குனியில் பின்பனி காலம். இவர்கள் கொடுத்த ஓரிரு ஆதாரங்களும் தவடுப்பொடு ஆகிவிட்டன..
சீவக சிந்தாமணியில் முக்தியிலம்பகத்தில் (3070 – 72) சீவகன் ஓராண்டுக் காலம் தவம் செய்தது வர்ணிக்கப்படுகிறது. நந்நான்கு மாதங்கள் கொண்ட மூன்று பருவங்களாக, “”தீயுமிழ் திங்கள் நான்குவானம் நீர்த்திரள் சொரிந்திடு திங்கள் நான்குபனிவரை உருவி வீசும் மங்குல் சூழ் வாடை நான்காய திங்கள்” என ஓராண்டுக்காலம் குறிப்பிடப்படுகிறது. இங்கெல்லாம் கோடைக்காலமே முதலாவது பருவமாகக் குறிப்பிடப்படுவதைக் கவனிக்க வேண்டும்


சித்திரையை முதலாக கொண்டு பகுத்தால்,
தீயுமிழ் திங்கள் நான்கு(கோடைக்காலம்): சித்திரை, வைகாசி, ஆனி,ஆடி
வானம் நீர்த்திரள் சொரிந்திடு  திங்கள் நான்கு(மழைக்காலம்): ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை
பனிவரை உருவி வீசும் மங்குல் சூழ் வாடை நான்காய திங்கள்(பனிக்காலம்):மார்கழி, தை, மாசி, பங்குனி
மிகச்சரியாக பொருந்துகிறது. இதுவே தையை முதலாக கொண்டு பகுத்தால்,
தீயுமிழ் திங்கள் நான்கு(கோடைக்காலம்): தை, மாசி, பங்குனி, சித்திரை
வானம் நீர்த்திரள் சொரிந்திடு  திங்கள் நான்கு(மழைக்காலம்): வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி
பனிவரை உருவி வீசும் மங்குல் சூழ் வாடை நான்காய திங்கள்(பனிக்காலம்):புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி.

கத்திரி வெய்யில் மண்டையை பிளக்கும் வைகாசி மழைக்காலமா? காற்றடிக்கும் ஆடி மாதம் மழைக்காலமா? அடைமழை பொழியும் ஐப்பசி பனிக்காலமா? இப்போதும் சற்றும் பொருந்தாத பகுப்பே வருகிறது. எனவே, இளவேனிலான சித்திரையை முதல் மாதமாக கொள்வதே சிறப்பு.

(தொடரும்)


எது புத்தாண்டு??? பாகம் 2


சித்திரையே புத்தாண்டு என்று நிருபிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், காலங்காலமாக சித்திரைதான் முதல் மாதமாக நடைமுறையில் இருந்து வருகிறது. திடிரென்று ஒரு, புது புத்தாண்டு கொண்டு வரும்போதுதான் அதற்கு ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. அதற்காக, நான் சித்திரை மாத புத்தாண்டு ஆதாரங்கள் தராமல் இருக்கப்போவது இல்லை. முதலில், அவர்கள் தை தான் புத்தாண்டு என்று கொடுக்கும் ஆதாரங்களை அலசுவோம். அதன் பிறகு சித்திரை புத்தாண்டு ஆதாரத்திற்கு வருவோம்..

தை மாதம் தான் புத்தாண்டு என்று சொல்லுவோர்,  அறிவியல் பூர்வமான ஒருவாதத்தை எடுத்து வைப்பார்கள். அது என்ன? தை மாதம் தான் சூரியன் தன் தென்செலவு பயணத்தை முடித்துக்கொண்டு, வடசெலவு பயணம் தொடங்கும் என்பதால், அதுதான் புத்தாண்டு என்று. ஏம்பா, அதே சூரியன் தான், ஆடி மாதம் வடசெலவு பயணம் முடித்துக்கொண்டு, தென்செலவு பயணத்தை தொடங்குகிறது. அதற்காக, ஆடி மாதம் புத்தாண்டாகுமா? அது என்ன தைக்கு ஒரு நியாயம், ஆடிக்கு ஒரு நியாயம்? தை, ஆடி இரண்டுமே தமிழருக்கு சிறப்பான மாதம் தான். அதற்காக, அவை தமிழ் புத்தாண்டாக முடியாது. சரி, தை, ஆடி இல்லை, பிறகு எதை புத்தாண்டாக கொள்வது. தை மாதம் வடசெலவை தொடங்கும் சூரியன், ஆடி மாதம் தென்செலவை தொடங்கும் சூரியன், ஐப்பசி மாதம் நீச்சம் அடையும். சித்திரை மாதம் உச்சம் அடையும். அப்படி உச்சம் அடையும் சித்திரையே தமிழருக்கு புத்தாண்டு. பத்தாம் நூற்றாண்டு சோழர் கல்வெட்டிலும் அப்படியே குறிப்பிடப்பட்டுள்ளது. சித்திரை விஷு, ஐப்பசி விஷு, உத்ராயணம்(தை), தட்சணாயணம்(ஆடி).
ஆக, உத்ராயமான தையும், தட்சணாயமான ஆடியும் தமிழருக்கு புத்தாண்டு இல்லை. சூரியன் உச்சம் பெறும் சித்திரையே தமிழருக்கு புத்தாண்டு.
  

அடுத்ததாக , சங்க இலக்கியங்களில் தேடிக்கண்டுப்பிடித்து ஒரு ஐந்து வரிகளை கொடுப்பர்.
தைஇத் திங்கள் தண்கயம் படியும் – நற்றிணை
தைஇத் திங்கள் தண்ணிய தரினும் – குறுந்தொகை
தைஇத் திங்கள் தண்கயம் போல் – புறநானூறு
தைஇத் திங்கள் தண்கயம் போல – ஐங்குறுநூறு
தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ – கலித்தொகை

இதைக்கொடுத்துவிட்டு, இதுதான் புத்தாண்டு ஆதாரம் என்று கொடுப்பர். எல்லா ஜோரா ஒருவாட்டி கையத்தட்டுங்க... இவங்க உண்மையில் கடினப்பட்டு தை தான் புத்தாண்டு என்று நிருபிப்பதற்கு பதிலாக, சித்திரை தான் புத்தாண்டு என்று நிருபித்துள்ளனர். எப்படி என்று பார்க்கிறீர்களா?
எல்லா வரிகளையும் உற்று நோக்குங்க... எங்கேயாவது தை தான் புத்தாண்டு என்றோ, தை தான் ஆண்டின் துவக்கம் என்றோ இருக்கா? இவை தை திங்களைப்பற்றி தான் கூறியிருக்கின்றனத்தவிர தைத்திங்கள் தான் புத்தாண்டு என்று கூறவில்லை. பின் எப்படி சித்திரை திங்கள் தான் புத்தாண்டு என்று பார்ப்போமா? எல்லா வரிகளிலும் என்ன சொல்லியிருக்கிறது, தைமாதத்து குளுமையான குளத்தைப்போல, தை மாதத்து குளுமையான நீரைப்போல, தை மாதம் குளுமையான நீரில் நீராடிஎன்று தான் இருக்கிறது. (தண்மை = குளுமை). எப்போது குளங்களில் குளுமையான நீர் இருக்கும்? பனிக்காலங்களில் போதுதானே? ஆக தை மாதம் பனி பெய்திருக்கிறது. அதானால் குளங்கள் குளுமையாக இருந்திருக்கின்றன. அந்த நீரிலும் விரதம் வேண்டி பெண்கள் நீராடி உள்ளனர். அவ்வளவு தானே, இதற்கும்  புத்தாண்டிற்கும் என்னப்பா தொடர்பு? எனவே காலங்காலமாக கொண்டிருந்த நடைமுறைப்படியே மார்கழி, தை மாதங்கள் முன்பனி என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாசி, பங்குனி = பின்பனி, ஆக, சித்திரை, வைகாசி = இளவேனில். இளவேனிலே புத்தாண்டு தொடங்கும் காலம், எனவே சித்திரையே புத்தாண்டு


அடுத்ததாக தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்லியுள்ளனரே என்பார்கள். யாருக்கு வழி பிறக்கும்? திருமணத்திற்குக் காத்திருக்கும் கன்னிப் பெண்களுக்கு.  கலித்தொகைப் பாடலை பாருங்கள்.
காத்திருக்கும் தலைவனுக்கோ பெண்ணின் கடைக்கண் பார்வை கிடைக்கவில்லை. பாவை ஆடிய இளம் பெண், அவளைப் பார்த்து ஏங்கும் தலைவனைக் காணாள் இல்லை. அவளிடம் மனம் பறிகொடுத்த தலைவன் சொல்கிறான், நீ தையில் நீராடிய தவம் தலைப் படுவாயோ?” (கலித் தொகை 59)
இவளோ என்னைப் பார்க்கவே மாட்டேன் என்கிறாள். ஆனால், வருடம் தோறும், தையில் நீராடி, நல்ல கணவன் வேண்டும் என்று மட்டும் வேண்டிக் கொள்கிறாள். என்னைக் காணாது இருக்கையில், தை நீராடி தவம் இருந்து என்ன பயன்?” என்று நக்கல் பேச்சு பேசுகிறான். இப்படியெல்லாம் அக வாழ்கையின் ரசனை ததும்ப ஓடும் கருத்துக்களைக் கொண்டதால் அந்த மாதமே வருடப் பிறப்பு என்று எப்படி சொல்லலாம்?  இந்த தைநீரால் என்பது, தை முதல் தேதியில் தொடங்காது, மார்கழி மாதம் முழுநிலவிலேயே தொடங்கி, தைமாதம் வரை நீடித்து, தைப்பூசத்தன்று முடியும். ஆண்டாளே, திருப்பவையில், “மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர்!என்று சொல்லியதன் மூலம், மார்கழி முதல் நாளில் நீராட துவங்கவில்லையென்றும், மார்கழி முழுமதியில் நீராட துவங்கி, தைமாதம் வரை நீராடியுள்ளனர் என்று தெரிகிறது. அப்படி, இந்த பாவை நோன்பு முடித்த பெண்களுக்கு, தை மாதத்தில் நல்ல வழி பிறக்கும் என்பதே அந்த பழமொழியின் உண்மை. 

மேலும் தையை தொடர்ந்து வரும், மாசி மாதம் எப்படிப்பட்டது? மாகூர் திங்கள் என்னும் பதிற்றுப் பத்து பாடல் (59), மாக்கள் குளிர் தாங்காமல் உடலைக் குறுக்கிகொள்ளும் மாசி மாதம், மாகூர் மாசியாகும் என்கிறது. அந்தப் பாடலில், பாணன் எப்பொழுதுதான் குளிர் நீங்கி, வெயில் வரும் எனக் காத்திருக்கிறான். பொதுவாக, விடியலுக்கு முன்னாலேயே பாணர்கள் அரசனைக் காணக் கிளம்பி விடுவர். அப்பொழுதான், வெயிலுக்கு முன் அரண்மனை சென்று அடைய முடியும். ஆனால் மாசி மாதத்தில் விடிகாலையில் கிளம்ப முடிவதில்லை. குளிரும் பனியும் அதிகம். மேலும் மாசித் தன்மை உடையதால் அது மாசி என்று உரை காரர் கூறுகிறார். மாசி என்றால் மேகம் என்றும் பொருள். மேகமே இறங்கி வந்தாற்போல், பனி மூட்டம் நிலத்தின் மீது பரவி இருப்பதால் அது மாசி என்றாயிற்று.
நெடு நல் வாடையிலும், (6) மாமேயல் மறப்ப, மந்தி கூற என்று கூறுகிறது. மாசி மாதம், மாடுகள் குளிர் காரணமாக மேயச் செல்லாது மந்தி உடலைக் குறுக்கிக் கொண்டு இருக்கும். 
தையும் மாசியும் வையகத்து உறங்கு என்று பதிற்றுப் பத்து உரைகாரர் கூறுகிறார்.
இப்படி, பனி பெய்து குளிரால் நடுங்கும், மார்கழி, தை, மாசி ஆகிய மாதங்கள் புத்தாண்டாக இருக்க முடியுமா?? எனவே, இளவேனில் தொடங்கும் சித்திரையே புத்தாண்டு.


(தொடரும்)